• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்!..

பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த ரிட் மனு ஆகியவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் தொடங்கியது. விசாரணையில், இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு, எந்த இடத்திலும் ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக குற்றச்சாட்டு இல்லை. மேலும், போலீசார் துன்புறுத்தியதால்தான் ரவீந்திரன் பொய் வாக்குமூலம் அளித்தார் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவருக்கு எவ்வித சலுகையும் வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.