காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, பட்டினச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவ கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கூட்டத்தில் ஆந்திர மீனவர்கள் பிடித்து வைத்துள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்பது மற்றும் காரைக்கால் முதல் ராமேஸ்வரம் வரை கடலோரப் பகுதியில் பிரச்சனைகள் இன்றி மீன்பிடிப்பது குறித்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆந்திரா மாநில கடல் எல்லையில் மீன் பிடிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பின்பற்றாத விசைப்படகு உரிமையாளர் மீது காரைக்கால் மீனவர் பஞ்சாயத்தார்கள் 5 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் முதல் இராமேஸ்வரம் வரை ஐந்து நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.