திருச்சியில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கொள்ளை கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடம் இருந்து 9.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர் கடந்த செப்.13ம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தங்க நகைகளை சில்லரை விற்பனை செய்வதற்காக சென்றார்.

இவருடன் காரில் கடை ஊழியர் மகேஷ் ராவல் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரதீப்ஜாத் ஆகியோர் பயணித்த நிலையில் திண்டுக்கல்லில் சில்லரை விற்பனை செய்த பிறகு மீதமுள்ள நகைகளுடன் சென்னை திரும்பும்போது திருச்சி சமயபுரம் இருங்களூர் அருகே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் தலைமையிலான 5 தனிப்படையினர் துரித தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த கொள்ளை வழக்கில் கடந்த 05-ம் தேதி நகைகளை மீட்ட திருச்சி எஸ்.பி.செல்வநாகரத்தினம் தலைமையிலான தனிப்படையினர், கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை கைது செய்து இன்று திருச்சி செய்தியாளர்கள் மத்தியில் காட்சிப்படுத்தினார். அதன் பின்னர் திருச்சி எஸ்.பி.செல்வநாகரத்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர் கடந்த செப்.13ம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தங்க நகைகளை சில்லரை விற்பனை செய்வதற்காக சென்றார்.
கோவை, மதுரை, திண்டுக்கல்லில் குறிப்பிட்ட அளவு நகைகளை சில்லரைக் கடைகளில் கொடுத்து விட்டு, 10 கிலோ தங்க நகைகளோடு டி.என்.04-பி.ஏ.5157 என்ற காரில் மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது, திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே சரியாக இரவு 8.20 மணிவாக்கில், மூவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக, காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.
அப்போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த கருப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், குணவந்த் உட்பட மூவரின் கண்களிலும் மிளகாய் பொடியை துாவி விட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழிப்பறி செய்து தப்பினர். குணவந்த் கொடுத்த புகாரில், சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனைத்து டோல் பிளாசாக்கள் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவித்தனர். சமயபுரம் டோல் பிளாசாவில் ஆய்வு செய்தபோது தங்கத்தை கொள்ளையடித்துச்சென்றவர்கள் பயன்படுத்திய கார் டி.என்.06-வ்0608 கொண்ட கருப்பு நிற ஹூண்டாய் கார் எனத் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் மேற்படி கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண்ணானது போலி என்பதும், காரின் உண்மையான பதிவெண் 25 பி.ஹெச்.4097 ஜெ என்பதும் அதன் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச்சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து எனது உத்தரவின் பேரில் லால்குடி டி.எஸ்.பி.தினேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநில காவல்துறையினர்களுக்கும் தகவல் தெரிவித்து வெளிமாநிலங்களில் தமிழக காவல்துறையினர் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி, கணவந்த் வந்த ஜோத்பூரைச்சேர்ந்த காரின் ஓட்டுநர் பிரதீப்ஜாத்க்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரதீப் ஜாத்தை விசாரணை செய்ததில் அவனுடன் தொடர்பில் இருந்த மனோகர் ராம் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் 250 தொலைபேசி எண்கள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததிலும், 15-க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் கர்நாடகா காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரை கண்டு பிடித்தோம்.
அதனைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களின் ஆய்வுகளின்படி மத்திய பிரதேசம் சென்ற போலீசார், மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில், பர்வானிக்கு சென்ற பஸ்சை சோதனை செய்தனர். அதில், இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜோத் மங்கிலால், விக்ரம் ஜாட் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மீதமுள்ள குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினர்.
அதன்படி, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பன்னாராம் தேவாசி என்கிற வினோத், சொகைல்கான் என்கிற முகமது சொகைல், கைலாஷ், ஹனுமான் ஜாட், மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவி ஆகியோரை கடந்த 05-ம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தோம்.
பின்னர், அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.6 லட்சம், தங்க நகைகள் சுமார் 9.432 கிலோவை அவர்களிடம் இருந்து மீட்டோம். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்மார்ட் போன் 7, பட்டன் போன்1, சிம் கார்டுகள் 40 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தோம்.
தமிழக போலீசாரால், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிற மாநில போலீஸாரின் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரையும் துரிதமாக செயல்பட்டு கைது செய்தோம். இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட டி.எஸ்.பி.கள் தினேஷ்குமார், ராஜமோகன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் ஆளிநர்கள், சைபர் குற்றப்பிரிவு காவலர்கள், பிற மாநில காவலர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகின்றேன் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த தங்க நகைகள் உரிய அனுமதியுடன் கொண்டு செல்லபடாதது குறித்தும், வருமானவரித்துறைக்கும் இது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. பெருநிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை சேர்க்கும்போது அந்த நபரின் பின்புலம் குறித்து ஆய்வு செய்தப்பிறகே வேலைக்கு அமர்த்த வேண்டும்.
விலை உயர்ந்த தங்க, வைர ஆபரணங்களை வாகனங்களில் எடுத்துச்செல்லும்போது உரிய பாதுகாப்புடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எடுத்துச்செல்ல வேண்டும். பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும், இருள் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறையின் காவல் உதவி மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். மேற்காணும் வழிநடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மீட்ட காவல் அதிகாரிகள் குழு படம் எடுத்துக்கொண்டனர்