நாகை மாவட்டம் வானவன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் அதே பகுதியில் சுமார் மூன்று தலைமுறையாக குடும்பத்தோடு வசித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டு நருகே ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் சுந்தரேசன் அருகாமையில் உள்ள 100 குழி நிலத்தில் வெட்டிவேர் சாகுபடியும் செய்து வருகிறார். இந்த நிலையில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படும் இடத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சிலர் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் வட்டாட்சியர் வடிவழகன் குரோ பேக் முறையில் வெட்டிவேர் விவசாயம் செய்திருந்ததை அகற்றுமாறு கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சாகுபடி முடிந்தபிறகு நடவடிக்கை எடுக்குமார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை கேட்காமல் வட்டாட்சியர் வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையை வைத்து வெட்டிவேர் பைகளை அப்புறப்படுத்தினர். வெட்டிவேர் பைகளை அழிக்க வேண்டாம் என பெண்கள் வட்டாட்சியரிடம் கதறி அழுத நிலையிலும், அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெட்டிவேர் பைகளை அகற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 100 குழி நிலத்தில் 15 லட்ச ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவேர்கள் வருவாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகி இருப்பதாகவும் இதற்கு வருவாய் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.