நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த நான்காம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

நேற்று முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ரிஷப கொடி சமந்தன்பேட்டை, நாகை ஆரியநாட்டுத் தெரு கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் அக்கரைப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் எழுந்தருளினார்.

அப்போது ஆலயத்தில் உள்ள கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம் விபூதி, பால், தயிர், பழச்சாறுகள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துவாஜரோகனம் எனும் கொடியேற்றும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. இதில் கூட்டுப் பிரார்த்தனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து அம்பாள் வீதி உலா நடைபெற்றது. முன்னடியார், காத்தவராயன், விநாயகர், முருகன், சீராளம்மன் ஆகிய பரிவார சாமிகளுடன் ஸ்ரீமுத்து மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் கலந்து கொண்டு அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கரைப்பேட்டை மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
