விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிர் பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர் விபத்துக்களை தடுக்க தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் சிவகாசியில் இயங்கும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தின் தலைவர் கணேசன், பேசியதாவது….
பட்டாசு ஆலைகளை உள் குத்தகைக்கு விடுவதால் விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. முறையாக விதிமுறையை கடைப்பிடித்தால்
பாதிப்பின் அளவு குறைவாக இருக்கும்.

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் பட்டாசு தயாரிப்பு அறைகளுக்கு வாடகை அதிகம் கொடுக்க வேண்டிய நிலையில் அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் உள் குத்தகை விடுவது என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. பேன்சி ரக பட்டாசு ஆலைகளில் முறையான கட்டமைப்பு வசதி இல்லை என்றால் விபத்தில் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
பட்டாசு ஆலைகளில் முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் விபத்துகளில் பாதிப்பு அதிகமாக ஏற்படுவதாகவும், முறையான கட்டமைப்பு வசதிகளை அனைத்து ஆலைகளும் மேற்கொள்ள வேண்டும்.
உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமையாளர்கள் அனைவரும் சுய விழிப்புணர்வோடு, பணியற்றினால் மட்டுமே தொழிலை காப்பாற்ற முடியும்.
மேலும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தொழிலாக பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்படும் பயிற்சி செயல் விளக்க பயிற்சியாக வழங்க வேண்டும், பூட்டிய ஆலைகளில் வைத்து இரசாயன கலவைகள் குறித்த செயல் விளக்க பயிற்சிகளை வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் விபத்துகளை தவிர்க்க தமிழக அரசு “பைரோ சிட்டி” மினியேச்சர் தொழிற்சாலைகளை உருவாக்கி அங்கு முறையான பயிற்சிகளை வழங்குவதுடன், மினியேச்சர் தொழிற்சாலையில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பணியாற்ற முடியும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

விபத்து ஏற்பட்டவுடன் அதனை தடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி, பட்டாசு ஆலைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலைகளில் போதிய பயிற்சி பெறாமல் பணியில் ஈடுபடுவதால் 60 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. ரசாயன கலவை செய்யும் பணிகளுக்கு இயந்திரம் பயன்படுத்த முன் வர வேண்டும். பட்டாசு உற்பத்தி பணியில் அனைவரும் சுய ஒழுங்கு முறையை கடைபிடிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் விபத்தே இல்லாத வகையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளும் வாக்குறுதியுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள பேரியம் நைட்ரேட் பயன்பாட்டில் இருந்தபோது விபத்து மிக குறைவாக இருந்தது.
பேரியம் நைட்ரேட் ரசாயனதிற்கு தற்போதை தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதிய புதிய ரசாயன மூலப்பொருட்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது, புதிய ரசாயன பொருட்களின் வினை குறித்த புரிதல் இல்லாமல் அதன் எதிர்வினையால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் அனைத்து தொழிலாளர்களிடமும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களிடம் உரிமையாளர்கள் கலந்து பேச வேண்டும். தொழிலாளர்களின் மனநிலையை அறிந்து அவர்களை பணியமர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமையாளர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட மாநிலங்களில் சிவகாசியின் பிரபல பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களின் பெயரில் போலியாக பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கவும் வலியும் நாடுகளுக்கு பட்டாசு உற்பத்தி ஏற்றுமதி வாய்ப்பை பெறவும், பட்டாசு தொழிலுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் பட்டாசு ஏற்றுமதி அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.