200 ரூபாய் கொடுக்கிறேன் சொல்லிட்டு 100 ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா….. அந்தப் பக்கம் 200 ரூபாய் கொடுக்குறாங்க, நாங்க சொந்தக்காரங்கனால நூறு ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவின் போது மூதாட்டி ஒருவர் புலம்பிச் சென்றார்.


பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் நகைச்சுவை கலந்த அரசியல் பேச்சுக்காக கூட்டம் கூடும் என்று அதிமுக கட்சியினர் எதிர்பார்ப்பு மத்தியில், இந்த பொதுக்கூட்டத்தில் 100 நபர்களுக்கும் குறைவாகவே பங்கேற்றனர். எப்போதான் கூட்டம் முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வயதடைந்த மூதாட்டிகள் கூட்டம் முடிந்தவுடன், பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடைக்கு பின்பாக குவியத் தொடங்கினர். என்னடா கூட்டம் என நமது கேமராவை அந்த பக்கம் திருப்ப, நூறு ரூபாய்…. நூறு ரூபாய்…. பெயர் கொடுத்தவர்களுக்கு மட்டும் நூறு ரூபாய் என்ற சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அந்தப் பகுதி மக்களுக்கு கையில் 100 ரூபாய் கட்டுகளை வைத்துக்கொண்டு, தலைக்கு நூறு ரூபாய் என அங்கு பேசிய நபர் பெயர் கொடுத்தவர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லிக்கொண்டு 100 ரூபாய் தாளை வாரி வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டு சென்ற மூதாட்டி ஒருவர், 200 ரூபாய் சொல்லிட்டு 100 ரூபாய் கொடுக்குறாங்கப்பா, சொந்தக்காரங்கனால 100 ரூபாய், அந்தப் பக்கம் தான் 200 ரூபா குடுக்குறாங்கப்பா என்று புலம்பி கொண்டு சென்றார். இதைப் பார்த்துக் கொண்டு சாலையில் சென்ற சிலர், டேய் இது தானா சேர்ந்த கூட்டம் இல்லடா…நூறு ரூபாய்க்கு சேர்ந்த கூட்டம் டா என்ற நகைச்சுவையுடன் கூறிக்கொண்டு சென்றனர்.








