• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மீண்டும் சென்னையில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Byமதி

Nov 16, 2021

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது கொட்டிய மிக கனமழையால், சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

தற்போது, தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,
அந்தமான் அருகே புதிதாக உருவாகி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 17-ந் தேதி அளவில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடைப்பட்ட இடத்தை நோக்கி வந்து, 18-ந் தேதி கரையை கடக்கும்.

அதே நேரத்தில் அரபிக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட இடங்களில் காற்று திசை மாற்றம் ஏற்படும். இதனால் வங்கக்கடலில் உள்ள ஈரப்பதம் இழுக்கப்பட்டு தமிழகம் நோக்கி வரும். இதன் காரணமாக தமிழகத்தில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு உருவாகும்.

இன்று ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை 17-ந் தேதி வடதமிழகம் நோக்கி வருவதால் 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரையில் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் பலத்த மழை பெய்யும். மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை தரைப்பகுதிக்கு வருவதால் 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் 17, 18, 19-ந் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பாலச்சந்திரன் கூறினார்.

ஏற்கனவே பெய்த மழையினால் சென்னை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்தநிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகத்தை நோக்கி வருவதால் சென்னையில் பலத்த மழை பெய்ய உள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.