• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

யார் அந்த கண்ணன் ரெட்டியார்? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Byஜெ.துரை

Jan 21, 2023

நடிகர் வடிவேலு காமெடி போல், சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதி அனுப்பியதோடு, சென்னை விமான நிலைய போலீஸ், செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, போலீசிடமும் வடிவேலு காமெடி பாணியில் பேசிய, கள்ளக்குறிச்சி கண்ணன் ரெட்டியார் என்பவருக்கு போலீஸ் வலைவீச்சு.
சென்னை விமான நிலைய மேலாளருக்கு, தபாலில் ஒரு கடிதம் வந்தது. தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை பிரித்துப் படித்த விமான நிலைய மேலாளர்,அதிர்ச்சி அடைந்தார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் ரெட்டியார் எழுதுகிறேன் என்று தொடங்கி இருந்த கடிதத்தில்,
கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரையில் எனக்கு சொந்தமான நாடு. இந்த நாட்டில் எனக்கு எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், என்னை விமானநிலையத்தின் உள் பகுதிக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே, உங்களுடைய காவலர்கள் நிறுத்தி விடுகின்றனர்.
இந்த விமான நிலையம் என்னுடைய விமான நிலையம். அப்படி இருக்கையில் என்னை ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள்? நான் விரைவில் மீண்டும் சென்னை வருவேன். அப்போது என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும். மறுத்து தடுத்து நிறுத்தினால், மோசமான விளைவுகள் ஏற்படும். அதை நீங்கள், சந்திக்க நேரிடும். எனவே மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். இனிமேல் நான் வரும்போது என்னை தடுத்து நிறுத்தக்கூடாது. இது எச்சரிக்கை.
இவ்வாறு கையால் தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் கண்ணன் ரெட்டியார், கள்ளக்குறிச்சி, மற்றும் ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த கடிதத்தை படித்துப் பார்த்த விமானநிலைய மேலாளர், திகைத்தார். அதோடு அந்த கடிதத்தை சென்னை விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பினார். இயக்குனரும் கடிதத்தை படித்து பார்த்து விட்டு, ஒன்றும் புரியாமல் திகைத்தார்.
அதன்பின்பு சென்னை விமான நிலைய அதிகாரிகள், அந்த காமெடியான மிரட்டல் கடிதத்தை, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு, இணையதளம் மூலம் புகாராக அனுப்பி வைத்தனர்.சென்னை விமான நிலைய போலீஸ், இணையதளத்தில் வந்த, அந்த கடிதத்தை படித்ததும், அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை. அதன் பின்பு அந்த கடிதத்தில் இருந்த கண்ணன் ரெட்டியார் செல்போன் எண்ணை, போலீசார் தொடர்பு கொண்டனர்.
எதிர் முனையில் போன் எடுக்கப்பட்டதும், விமான நிலைய போலீசார்,நீங்கள் யார், எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு மறுமுனையிலிருந்து,நீங்கள் யார்? எதற்காக எனக்கு போன் செய்கிறீர்கள்? என்ற கேள்வி வந்தது. சென்னை விமான நிலையம் போலீஸ் நிலையத்திலிருந்து பேசுகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறினர். எதற்காக போன் செய்கிறீர்கள்? முன்னதாகவே தெரிவிக்காமல், இப்படி திடீரென போன் செய்தால் எப்படி? என்று மறுமுனையில் கேள்வி வந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், நாங்கள் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திலிருந்து பேசுகிறோம். உங்களை விசாரிக்க வேண்டும். எனவே நீங்கள் புறப்பட்டு,சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், என்று கூறினர். அதற்கு அவர், நான் கண்ணன் ரெட்டியார். நான் யாரையும் தேடிச் செல்ல மாட்டேன். என்னிடம் பேச வேண்டும் என்றால், நீங்கள் என்னை தேடி கள்ளக்குறிச்சி வாருங்கள் என்று கூறிவிட்டு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பின்பு அவர் போனை எடுக்கவில்லை.இதனால் போலீசார் மிகுந்த குழப்பம் அடைந்தனர். இந்த கடிதத்தில் உள்ள எழுத்துக்கள், செல்போனில் பேசிய குரல் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, வயதான ஒருவர் தான் கண்ணன் ரெட்டியார் என்று தெரிய வந்தது. அவர் ஏன் இவ்வாறு மிரட்டல் கடிதம் எழுதி இருக்கிறார்? போனில் பேசினாலும் ஏடாகூடமாக, வடிவேலு காமெடி போல் பேசுகிறாரே? என்று திகைத்தனர்.
அதன் பின்பு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதோடு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்து, இந்த கண்ணன் ரெட்டியார் என்பவர் யார் என்று விசாரிக்கவும் கூறி இருக்கின்றனர்.
கண்ணன் ரெட்டியார் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? இல்லையேல் வயதாகி விட்டதால் புத்தி தடுமாறி, இதை போல் நடந்து கொள்கிறாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். அதோடு அந்தக் கண்ணன் ரெட்டியாரை, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு, விசாரணைக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு உரிமை கொண்டாடி, நடிகர் வடிவேலு பாணியில், மிரட்டல் கடிதம் எழுதி, விமான நிலைய மேலாளருக்கு வந்துள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.