• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திறமையாளர்களை அங்கீகரிக்கும் மையமாக தமிழ் சினிமா உள்ளது

தென்னிந்திய மொழிப் படங்களில் வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் அறிமுகமான உடனேயே பிரபலமாகி விடுகிறார்கள். இதற்கு சம கால எடுத்துக்காட்டாக மலையாள நடிகையான ஆஷா ஷரத் விளங்குகிறார்.பாபநாசம்’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆஷா ஷரத் அப்போதே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்.


இப்போது ‘ஹிப் ஹாப்’ ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ திரைப்படத்தில், அம்மா கதாப்பாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் சிறப்பான நடிப்பிற்காக, பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இது குறித்து நடிகை ஆஷா ஷரத் பேசும்போது, “தமிழ் சினிமாவில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

‘த்ரிஷ்யம்’ படத் தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார்,அந்தக் கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்துபோன தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற மிகச் சிறந்த உச்ச நடிகருடன் தமிழ்த் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டியவிதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


இப்போது, இந்த ‘அன்பறிவு’ படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.
அடிப்படையில் நான் ஒரு பரத நாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன். என் நடனத் திறமை குறிப்பிடத்தக்க வகையில்,நடிப்பின்நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது.

தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது. இது மற்ற மாநில திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை தமிழ் மக்களின் அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும், பாராட்டையும் இந்தப் படத்தின் மூலமாக பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்று உற்சாகத்துடன் கூறினார்.