• Mon. Jul 1st, 2024

தேனியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வெறி தாக்குதல்

ByJeisriRam

Jun 28, 2024

ஜாதி பெயரை கூறி இழிவாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததால் பரபரப்பு.

பாதிக்கப்பட்டவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த நிலையில் புகாரை வாபஸ் பெறுமாறு காவல் ஆய்வாளர் பஞ்சாயத்து பேசிய வீடியோ வைரல்.

தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். (36).கடந்த 13.06.2024 அன்று வீரப்பனின் தாயார் உடல் நலக்குறைவால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வீரப்பனுக்கு தகவல் கிடைத்த நிலையில் நல்லிரவு 12:30 மணியளவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தனது செல்போனை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதால் வீட்டிற்கு தகவல் சொல்வதற்காக அங்கிருந்த ஒப்பந்த பணியாளர் வினாத்குமார் என்பவரும் தங்களது போனை கொடுத்தால் வீட்டிற்கு ஒரு போன் செய்து விட்டு தருவதாக கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த காவலர் இருவரையும் சமாதானப்படுத்தி வீரப்பனை வெளியே அனுப்பி உள்ளார்.

அப்போது வீரபாண்டியின் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் என்பவர் வேறொரு வழக்கு விசாரணைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில்,தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் இல்லை என்று தெரிந்தும் கூட வீரப்பனை அழைத்து எந்த ஊர்? என்ன ஜாதி என விசாரித்துள்ளார் ? இதற்கு தான் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவன் எனக் கூறிய நிலையில் அல்லிநகரம் என்றால் நீ குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவனாகத்தானே வேண்டி இருப்பாய். எனக்கேட்டு ஆவேசமாக அவரை தாக்கி உள்ளார்.

இதில் வீரப்பனுக்கு மேல் உதடு மற்றும் கீழ் உதடு கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியுள்ளது.மேலும் பிடரி கழுத்து வாய் உட்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டவுடன் வாயில் கடுமையாக தாக்கியதால் இரண்டு பற்களும் ஆடி உள்ளது. அவரைத் தாக்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் மெயின் கேட்டிற்கு வெளியே இழுத்து வந்து போட்டுவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி வீரப்பன் க.விலக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் மீது புகார் அளித்து (275/ 2024)ரசீது பெற்றுள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆண்டிபட்டி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் வழக்கை வாபஸ் வாங்குமாறு சரவணக்குமார் வீரப்பனை தொடர்ந்து வலியுறுத்தியதாக தெரிகிறது.மேலும் சிறப்பு சார்ந்த ஆய்வாளர் கோபாலை வரவழைத்து வீரப்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து பஞ்சாயத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவணகுமார் பஞ்சாயத்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 22.06.2024 அன்று சிறப்பு சார்ந்த ஆய்வாளர் கோபால் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு (117/2024) செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி காவல்துறை மற்றும் கோபாலின் உறவினர்கள் தொடர்ந்து வீரப்பனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

வீரப்பன் புகார் மனுவை வாபஸ் பெற மறுத்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஒப்பந்த பணியாளர் வினோத்குமார் என்பவரிடம் வீரப்பன் மீது பொய்யான புகாரை பெற்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (116/2024) செய்துள்ளனர்.இது தொடர்பாக ஆய்வாளர் சரவணக்குமார்,சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால்,மற்றும் ஒப்பந்த பணியாளர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வீரப்பன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது காவல் ஆய்வாளர் சரவணக்குமார் பஞ்சாயத்து பேசும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர் மீது ஜாதியை கூறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக காவல் வன்கொடுமைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *