கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பயிர் பாதுகாப்பு இயக்குனர் முனைவர் சாந்தி அறிவுறுத்தலின்படி ஈச்சங்கோட்டை தமிழ்நாடு அரசு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியில் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மதி ராஜன், திருவோணம், ஒரத்தநாடு வட்டார உதவி இயக்குனர் கணேசன் மற்றும் திருவோணம் வட்டார வேளாண்மை அலுவலர் சுதா, உதவி வேளாண்மை அலுவலர் சர்ச்சில் ஆகியர் கொண்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தென்னமநாடு, வடக்கு கிராமம் மற்றும் திருவோணம் வட்டாரத்தில் உள்ள வடக்கு கோட்டை ஆகிய கிராமங்களில் வயல்வெளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்பொழுது நிலவி வரும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் பருவ மழையினால் குருத்துப் பூச்சிகளால் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் பரவலாக பூச்சிகள் காணப்படுகிறது. வரும் காலங்களில் குருத்துப் பூச்சியின் பெண் அந்து பூச்சிகள் நெற்பயிரில் முட்டை குவியலை இடுவதற்கு சாதகமாக உள்ளது. எனவே குருத்துப் பூச்சியின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல் ஐந்து சதவீதம், ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து தூளாக்கி 20 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்த பின் மெல்லிய துணி கொண்டு வடிகட்டி அதனுடன் ஒட்டும் திரவம் 200 மில்லி கலந்து 180 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
அல்லது வேப்ப எண்ணெய் மூன்று சதவீதம் 1 ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்ப எண்ணெய் மற்றும் ஒட்டும் திரவம் 200 மில்லி கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மேலும் ஆசா டிராக்சன் 0.03% ஏக்கருக்கு 400 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

மேலும் அதனால் பூச்சியின் முட்டை குவியலை அழிக்கவும், இளம் புழுக்களை கொல்லவும், முதிர்ந்த புழுக்களை விரட்டவும், முதிர்ந்த புழுக்கள் உருமாற்றம் அடைவதும் தடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருத்துப் பூச்சியின் காலங்களில் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும். எதிர்வரும் காலங்களில் குருத்துப் பூச்சியின் சேதங்களை தவிர்க்கலாம். மேலும் ஆண் பூச்சிகளின் நடமாடத்தை கண்காணிக்கவும், கவர்ந்து அளிக்கவும், இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு ஐந்து சதவீதம் பயன்படுத்தி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பாக கையாண்டு குருத்துப் பூச்சியினால் ஏற்படும் மகசூல் இழப்பினை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி நல்ல மகசூல் அடைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.