• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிபின் ராவத் மற்றும் 13 பேர் உடலுக்கு இன்று ராணுவ மரியாதை

Byகாயத்ரி

Dec 9, 2021

குன்னூர் சென்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதி சடங்குகள் டெல்லி கன்டோன்மென்ட்டில் நாளை நடக்கிறது.

இந்த நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு வெல்லிங்டனில் உள்ள ராணுவ மைதானத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவர்களின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் பிறகு முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலமாக டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.


டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து பிபின் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் இருவரது உடலும் தகனம் செய்யப்பட இருக்கிறது.