• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ்

அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு பணிக்கு இருதேர்வுகளை நடத்துவது சமூக அநீதி என்பதால், ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித்தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.
அந்த வகையில் பணம் படைத்த, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித்தேர்வு வகை செய்கிறது. அதனால் தான் இதை சமூக அநீதி என பா.ம.க. விமர்சிக்கிறது. எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149-ஐ தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.