• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பெப்சி தலைவர் செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திரை உலகில் 24 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சியுடன் சம்பள உயர்வு குறித்து எங்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இன்னும் சில சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இருசாராரும் இன்னும் கையெழுத்து போட்டு இறுதியும் செய்யவில்லை.

இருசாராரும் சம்பள உயர்வு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை. அதற்குள் 50%சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவசரகதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன? இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி இறுதி செய்தபின் தயாரிப்பாளர் சங்கமும் , பெப்சியும் அது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின் தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகுதான் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும். அதுவரையில் இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள் வழங்கிவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். தயாரிப்பாளர்கள் நலமுடன் இருந்தால் தான் நம்மை நம்பி இருப்பவர்களும் நலமுடன் இருப்பார்கள். சமூக அக்கறையுடன் தொழில் நுட்ப கலைஞர்களை காப்பதும் நமது கடமை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.