• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) பணிகளில் ஊழியர்களுக்கு நெருக்கடியை அளிக்கும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, மாநில மையம் முடிவின்படி மாவட்ட, வட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமையன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு சங்கம், தமிழ்நாடு கிராம ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், “இந்திய தேர்தல் ஆணையமே, தமிழக தேர்தல் ஆணையமே, மாவட்ட ஆட்சியரே வருவாய்த்துறை அலுவலர்களை, அரசு ஊழியர்களை தற்கொலைக்கு தூண்டாதே… போதிய அவகாசம் இன்றி, அவசர கோலத்தில், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகளை திணிக்காதே… நவ.4 முதல் டிச.4 வரை ஒரு மாத காலம் அவகாசம் என்று சொல்லி விட்டு, 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்கச் சொல்லி நெருக்கடி அளிப்பது நியாயம் தானா… தினசரி 3 வேளையும், வாரம் 7 நாட்களும் கூகுள் மீட் நடத்தி குரல்வளையை நெரிக்கின்ற நடவடிக்கையை கைவிடு..

இரவு பகல் பாராமல் பெண் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லி பணிகளை முடிக்கச் சொல்லி சித்திரவதை செய்யாதே… எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கிடு… புதிய பணியிடங்களை வழங்கிடு.. கணினியில் பதிவேற்றம் செய்ய போதிய கணினிகள், கணினி பணியாளர்கள் வழங்கிடு…” என கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.