விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
சமாளித்து நின்று விளையாடி கேப்டன் மனீஷ் பாண்டே 40, ரோகன் கடாம் 37 ரன் எடுத்தனர். அதனால் ஸ்கோர் 100யை கடந்தது. ஆனால் மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற கர்நாடகம் 36.3ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 122ரன் எடுத்தது. தமிழ்நாடு தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4, ரவி சாய்கிஷோர் 3 விக்கெட்களை அள்ள, ரகுபதி சிலம்பரசன், வாஷிங்டன் சுந்தர், சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதனையடுத்து 123 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு 28ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 123ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 18, கேப்டன் நாராயன் ஜெகதீசன் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அரைசதம் விளாசிய பாபா இந்திரஜித் 51, வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கர்நாடகா தரப்பில் வித்யாதர், சுச்சித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.ஏற்கனவே முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய தமிழ்நாடு 3வது ஆட்டத்தில் நாளை பெங்காலுடன் மோத உள்ளது.








