நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிறப்பு தீபாரதனை கள் நடைபெற்றது இதையடுத்து இன்று இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வலத்தையடுத்து நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பாக யாக பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவமனை சாலை, காடம்பாடி, பால் பண்ணைச்சேரி வழியாக நாகூர் வந்தது. ஊர்வலத்தின் முன்பாக மங்கள இசையுடன் பல்வேறு கச்சேரிகள் இசைக்கப்பட்டது. நாளை (28ம் தேதி) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலையை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.