• Fri. Mar 29th, 2024

பள்ளி கல்லூரிகளில் விசாகா மற்றும் ஐ.சி.சி. கமிட்டியை அமைக்க இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள்

ByIlaMurugesan

Dec 2, 2021

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விசாகா கமிட்டி மற்றும் ஐ.சி.சி. கமிட்டிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், சிறுமி மற்றும் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திண்டுக்கல்லில் டிசம்பர் 5ம் தேதி மாநில அளவிலான சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இதனையொட்டி மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும் அதை அமுல் படுத்தப்படாதநிலை உள்ளன. இதனால் குற்றங்கள் பெருகி வருகின்றன.

இந்திய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைபடி 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு, சிறுமிகளுக்கும் கூட பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வருவது வேதனையளிக்கிறது. சமீபத்தில் கரூரில் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். கோயமுத்தூரில் சின்மயா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் உள்ள பத்மா சேஷாஸ்த்திரி மெட்ரிக் பள்ளி, மற்றும் சுசில்ஹரி இண்டர்நேசனல் பள்ளி, திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி, சென்னை கோயம்பேட்டில் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி, சிதம்பரம் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆகிய கல்விநிலையங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் நடைபெற்றது தொடர்பாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இதற்கு தீர்வு காணும் வகையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாநில சிறப்பு மாநாட்டை டிசம்பர் 5ம் தேதி திண்டுக்கல்லில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.


இந்த மாநாட்டில் கந்தவர்வக்கோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பெண்கள் உரிமை செயல்பாட்டாளருமான பி.எஸ்.அஜீதா, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இணை பேராசிரியர் சுபா, இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாணவிகள் உப குழு கன்வீனர். தீப்ஷிதா தர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன், மாணவிகள் உப குழு மாநில கன்வீனர் மு.சத்யா, மத்தியக்குழு உறுப்பினர் எம்.ஜான்சிராணி, திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் ஏ.கே.முகேஷ், மாவட்டத்தலைவர் டி.செல்வமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்று ஏ.டி.கண்ணன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *