திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக லேப்டெக்னீசியன்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் தரப்படாததால் பணிக்கு வராமல் நின்றுவிட்டனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகனுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் கொடுத்துள்ள இந்த மனுவில் கூறியிருப்பதாவது,திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் இன்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நூற்றுக் கணக்கான பெண்கள் இரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்காக வரிசையில் காத்து கிடந்தனர். ஆய்வகத்தில் ஒரே ஒரு நிரந்தர பணியாளர் மட்டுமே பணியில் இருந்துள்ளார்.
ஏற்கனவே அங்கு 6 மாத காலத்திற்கு தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளமே வழங்காமல் இருந்துள்ளார்கள். அவர்கள் கேட்டு கேட்டு சலித்து போய் இன்றில் இருந்து வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டனர்.
அங்கு இன்று காலை பணியில் இருந்த ஒரே ஒரு பணியாளர் எப்படி 300 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். இந்த நிலையில் எங்களுக்கு தகவல் தெரிந்து நானும் எங்களது அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சென்று மருத்துவ கல்லூரி முதல்வரிடம் கவனப்படுத்தி வந்தோம். எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு போதுமான ஆய்வக தொழில்நுட்ப வியலாளர்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.