தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களை சேர்த்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் திண்டுக்கல்லில் கூறியுள்ளார்.
திண்டுக்கல் தொழிற் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு கூட்டம் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். தொழில் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தொடர்ந்து தொழில் பயிற்சி பள்ளியில் உள்ள எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வெல்டிங், மிஷினரி உள்ளிட்ட அனைத்து ஆய்வகங்களில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மொத்தம் 90 தொழில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த 90 தொழில் பயிற்சி பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களுக்கு இட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி இருக்கிறதா என ஆய்வு செய்து எந்தெந்த தொழில் பயிற்சி மையங்களில் என்னென்ன தேவைகள் இருக்கிறது அவற்றை எல்லாம் முழுமையாக கணக்கெடுப்பு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவற்றையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கு தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சரின் நோக்கம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையான வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதே முழு குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஆண்டு பயிற்சி பள்ளி முடித்து அந்த துறையின் மூலமாக திறன் மேம்பாடு என்ற புதிய துறையை உருவாக்கி , அரசு மற்றும் தனியார் துறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி அளிப்பதுதான் அரசின் நோக்கம். ஒரு தொழில் பயிற்சிக்கு ஆயிரம் பேர் வீதம் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் தயார்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
திண்டுக்கல் போட்டித் தொழில் குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பேசுகையில், ஏற்கனவே கூட்டு தொழில் குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறோம். தனியார் தொழில் நிறுவனங்கள் மார்க்கட்டிங் அதிக அளவில் செய்வதால் திண்டுக்கல் பூட்டு விற்பனை குறைந்துள்ளது. பூட்டு தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலை உயர்வு அதிகமாக உள்ளது. மூலப் பொருட்களின் விலையை குறைப்பதற்கும், பூட்டு தொழில் மார்க்கெட்டிங்கிற்கும் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்போம் என பேசினார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ், தொழில் பயிற்சி பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.