இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வண்ணங்களின் திருவிழா எனப் போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹோலி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புனிதமான ஹோலிப் பண்டிகையையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வருகிறது.
இந்தப் பண்டிகை நமது வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது. ஹோலிப் பண்டிகையின் பலவகையான வண்ணங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை தீமையை நன்மை வெல்லும் என்பதன் அடையாளமாகவும் திகழ்கிறது. நம்மை சுற்றிலும் அன்பும், நேர்மறை எண்ணங்களும் வரவர நமக்கு இந்தப் பண்டிகை போதிக்கிறது. வண்ணங்களின் திருவிழாவான இது உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் சேர்க்கட்டும்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள். மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் கொண்டு வரவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணங்களை ஆழப்படுத்தவும் வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)