• Wed. Apr 24th, 2024

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 64 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி

ByIlaMurugesan

Oct 11, 2021

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் நன்கொடையுடன் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிசன் உற்பத்தி கலனை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வரும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியின் காரணமாக மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில், தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிசன் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு மற்றும் மூன்று மாதம் வேலை பார்த்து இருந்தாலும் அவர்களை வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து பணியில் அமர்த்தும்படி தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் தாராளமாக தடுப்பூசி கிடைத்தபோதும் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நாலரை மாதத்தில் 5 கோடியே 3 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 5 மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இதுவரை முதல் தவணை தடுப்பூசி 66 முதல் 67சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்று மாலை வரை முதல் தவணை தடுப்பூசி 64 சதவீதம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *