திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து கட்டணத்தை விட அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தனியார் பேருந்துகளில் தான் பொதுவாக கூடுதலாக கட்டணம் வசூலிப்பார்கள். அரசு பேருந்துகளில் மக்களுக்கு சலுகை செய்வது போல கட்டணங்களை குறைப்பது வழக்கம். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்துகளில் தலைகீழாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசு பயணிகளிடம் கட்டணம் என்ற பெயரில் கசக்கி பிழிந்து வந்துள்ளது. தனியார் பேருந்துகளைக் காட்டிலும் அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் பல முறை அரசு போக்குவரத்து நிர்வாகங்களுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு பேருந்துகளில் நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்துகளில் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.23 தான் வசூலிக்கப்படுகிறது. ஒரு நபரிடம் ஒரு ரூபாய் 2 ரூபாய் கூடுதலாக வசூலிக்கலாம். ஆனால் ரூ.7 வரை வசூலிப்பது கொள்ளைக்கு சமம். இப்படி வசூல் செய்த பணத்தில் அந்த பேருந்துகளை உருப்படியாக வைத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. இதே போல் மாவட்டத்தில் தனியாரை விட கூடுதலாக எந்தெந்த வழித்தடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் முன்வரவேண்டும் என்று பயணிகள் கோருகிறார்கள்.