உத்தரபிரதேசத்தில் லக்கீம்பூர் மாவட்ட விவசாயிகள், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறாரகள். இந்நிலையில் துணை முதலமைச்சரும், ஒன்றிய அமைச்சரும் தங்கள் பகுதிக்கு வருவதை கேள்விப்பட்டு போராடச் சென்றனர். போராட்டத்தின் போது ஒன்றிய அமைச்சரின் மகன் தனது காரை விவசாயிகள் மீது ஏற்றியதால் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனையொட்டி திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக இன்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்.பெருமாள் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நிக்கோலஸ், பாலுபாரதி பாண்டி, தங்கவேல் மற்றும் மக்கள் நீதி மையம் சார்பாக சீனிவாச பாபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் டி முத்துசாமி, சிஐடியூ சார்பாக மாணிக்கம் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த படுகொலையை நடத்திய பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.