



கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் தங்கம், அரியவகை உயிரினங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானங்கள் மூலம் கடத்தி வருகிறது. அப்படி மலேசியா தலைநகர் கோலாம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை 8 மணியளவில் வந்தடைந்தது. இதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது அதிர்ச்சியடைந்தனர்.
கோலாம்பூரில் இருந்து வந்த பயணி, தனது உடமையில் 5 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப்பொருளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாயாகும். அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட சம்பவம், திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

