• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து : விஞ்ஞானிகள் அதிர்ச்சி

Byவிஷா

Apr 4, 2025

2024 ஒய்ஆர் 4 என்கிற விண்கல் பூமியைத் தாக்கும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு பூமிக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சிலியில் இருந்த நாசாவின் ஆய்வு மையத்தில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ சுமார் 11 மாடி கட்டிடத்தின் உயரத்தில் இக்கல் இருக்கிறது. வியாழன் கோளுக்கும், செவ்வாய் கோளுக்கும் இடையே விண்கல் குவியல்கள் இருக்கின்றன. இதிலிருந்து விண்கற்கள் சில சூரியனை நோக்கி வரும். இப்படி வரும்போது அது பூமி மீது மோதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விண்கல்லாகத்தான் 2024 ஒய்ஆர் 4 பார்க்கப்பட்டது. எனவே எல்லா தொலைநோக்கிகளும் இந்த கல்லை நோக்கி திருப்பப்பட்டன. விண்வெளியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கூட இக்கல்லை நோக்கி திருப்பப்பட்டது. ஏராளமான ஆய்வுகள், கணக்கீடுகள் செய்யப்பட்டது இக்கல் பூமி மீது மோத 3சதவீதம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆய்வுகளில் இந்த சதவிகிதம் 2 என்றும் 1 என்றும் குறைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஆய்வில் இக்கல் பூமியை தாக்காது என்று உறுதி செய்யப்பட்டது.
பூமி தப்பித்துவிட்டாலும், நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்பீல்டு இயற்பியல் ஆய்வகம் இது தொடர்பாக ஆய்வு செய்து, விண்கல் நிலவை மோத 1.7 முதல் 2சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த மோதல் மூலம் நிலவில் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொஞ்சம் பெரிய சைஸ் பள்ளம் ஏற்படும். தூசி மணல் படலம் பரவும். ஆனால் அதை தாண்டி பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவின் விட்டம் 3,474 கிமீ. நிலவின் மொத்த எடை 7.35 × 10¹⁹ கிலோகிராம். ஆனால் விண்கல்லின் எடை மிக சிறியது. எனவே, இது நிலவின் பாதையை எதுவும் மாற்றாது. சிம்பிளாக சொல்வதெனில் விண்கல்லின் மோதல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.