திண்டுக்கல் அருகே ஓடப்பட்டியில் தலித் மக்களின் வீடுகள் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களை கண்டுகொள்ளாத நிலை உள்ளது.
திண்டுக்கல் கரூர் சாலையில் ஜி.டி.என். கலைக்கல்லூரிக்கு அருகில் உள்ளது ஓடப்பட்டி. கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த ஊரில் உள்ள குளத்தில் தண்ணீர் பெருகி 20க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் ஒரு வாரமாக பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். குடிநீர் இல்லை. உடல் உபாதைகளை கழிக்க முடியவில்லை. தூக்கமில்லை.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அப்பகுதி மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அங்குள்ள நாடகமேடையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவுக்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சீலப்பாடி ஊராட்சி நிர்வாகமும் உணவு வழங்குகிறது. மழை காரமணாக இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக குளத்தில் தண்ணீர் வற்றாத நிலை உள்ளது. இதன் காரணமாக தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல இயலாத நிலை உள்ளது. கடும் பனியிலும் குளிரிலும் நாடகமேடையிலேயே தங்கி உள்ளனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்., மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி, தா.அஜாய்கோஷ், திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் சரத்குமார், சிபிஎம் ஒன்றியக்கவுன்சிலர் செல்வநாயகம், ஒன்றியத்தலைவர்கள் பழனிச்சாமி, கே.பி.நேரு, ராஜாமணி, ராஜேந்திரன், தங்கமணி, பாக்கியம், லெனின், தீத்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதனன்று சுசீலாமேரி தலைமையிலான செஞ்சிலுவை சங்கத்தினர் 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
குளத்தில் மீன் பாசி ஏலம் எடுத்தவர்கள் தண்ணீரை வெளியேற்றவிடாமல் தடுக்கிறார்கள். ஒரு மதகு பழுதடைந்து உள்ளது. இன்னொரு மதகை திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் குளத்திலிருந்து குறைவான தண்ணீர் வெளியேறுகிறது. இரவு நேரத்தில் மீன் வெளியேறிவிடும் என்று தண்ணீரை வெளியேற்றவிடாமல் அடைத்து விடுகிற நிலையும் உள்ளது. இதன் காரணமாக வெள்ளம் வடியாமல் உள்ளது. இது தொடர்பாக பாலபாரதி மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் ; முறையிட்டார். இதனயைடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் இன்று குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை என்றால் சாலை மறியல் செய்யப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.