

விளாம்பட்டி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் மெத்தனத்தால் அறுவடை செய்யப்படாமல் 200 ஏக்கர் வயலிலேயே நெற் பயிர்கள் முளைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியப்பகுதியில் வைகை ஆற்று பாசனம் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் பிரதான வேளாண் பயிர் நெல். ஆனால் இந்த நெல்லை கொள்முதல் செய்ய இப்பகுதி மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்பகுதியில் உள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது.

இதில் விளாம்பட்டி நெல் கொள்முதல் நிலையம் மிக முக்கியமான நெல் கொள்முதல் நிலையமாகும். 30 ஆயிரம் டன் நெல் இங்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் விவசாயிகளை நிர்பந்தித்த நிலையில் விவசாயிகளின் நெல் எடுக்கப்படாமல் போதிய பாதுகாப்பு இல்லாமலும் சாலைகளில் பட்டறைகளாக போட்டு வைத்துள்ளனர். இதனால் இந்த மழையில் நெல் முளைத்தது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இங்கு கொண்டு வந்த நெல்லை அரசு உடனடியாக எடுத்துக்கொண்டால் தான் வயலில் அறுவடைக்காக காத்துக்கிடக்கிற 200 ஏக்கர் நெல் பயிர்கள் முளைத்து விவசாயிகளிடம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே மழையின் காரணமாக வயலிலேயே அறுவடை செய்ய முடியாமலும் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்வதால் நெற்பயிர்கள் முளைத்தது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாத அவல நிலைக்கு பெரும் நஷ்டமடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.
110 நாட்களில் அறுவடை செய்ய நெல் தற்போது 120 நாளுக்கு மேலாகியும் அறுவடை செய்ய முடியாமல் உள்ளனர். அதற்கு காரணம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் எடுக்காமல் காலதாமதப்படுத்துவதே காரணம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனை நீடிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
