கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியூ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தீர்த்தான் புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன் நிர்வாகிகள் பாலசுப்ரமணி, வின்சன்ட், சிறுமணி ராஜு, பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சட்டமன்றத்தில் அறிவித்தப்படி 6 ம் வகுப்பு முதல் உதவி தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். பென்சன் , கல்வி , இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட மனுக்களுக்கு பணபலன்கள் வழங்கிட வேண்டும். புதுப்பதிவிற்கு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கையெழுத்திடாத கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு வீடு வழங்க வேண்டும், நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் கணினி எண் வழங்கி புதுப்பித்தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.