மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 120 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றும் கார்த்திக் என்பவர், படிக்காத மற்றும் கையெழுத்து ஒழுங்காக இல்லாத மாணவ மாணவிகளை பிரம்பால் அடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த மாணவ மாணவிகள் 6 பேரை ஆசிரியர் கார்த்திக் பிரம்பால் அடித்ததில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் இது குறித்து அறிந்த பெற்றோர் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த பேரையூர் வட்டாச்சியர் செல்லப்பாண்டியன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் திலகவதி, எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் பெற்றோரின் கோரிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் கார்த்திக் – யை பணிமாறுதல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் உத்தரவிட்டார்., இதனையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.




