
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் குருவிகுளம் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணத்துரை, இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் காட்டன் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி தனலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணத்துரைக்கு, குலசேகரமங்கலத்தை சேர்ந்த திருமணம் ஆன தெய்வானை என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், அதற்கு தெய்வானையின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தெய்வானையின் சகோதரர் லட்சுமணத்துரையைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். நேற்றிரவு மீனாட்சி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த லட்சுமணத்துரையின் காரை வழிமறித்து, குலசேகரமங்கலத்தை சேர்ந்த குமார் அவனது மனைவி ராஜேஷ்வரி, தேசிங்கு ராஜா ஆகியோர் கூட்டாக சேர்ந்து அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் ரத்தவெள்ளத்தில் சரிந்த லட்சுமணத்துரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குமார் அவரது மனைவி ராஜேஷ்வரி மற்றும் தேசிங்கு ராஜா ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
