கடந்த மாதம் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கோவையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழலில் ஈடுபட்டதாகவும், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாகவும் புகார்கள் குவிந்ததாக தெரிகிறது.