பிளாஸ்டிக் மறுசுழற்சியில் சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மகளிர் குழுவுடன் பிரதமர் மோடி முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்.பஞ்சம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில அமைக்கப்பட்டுள்ள மகளிர் கூட்டமைப்பினர் ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து பிளாஸ்டிக்குகளை பிரித்தெடுத்து அதனை அரைத்து தார்ச்சாலைகளில் தாருடன் சேர்ந்து பயன்படுத்த மறு சுழற்சி செய்கிறார்கள்.
இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் இதுவரை 101 டன் பிளாஸ்டிக்குகள் அரைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக்குகள் 200 கி.மீ தூர சாலை போட பயன்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி இங்குள்ள சுழற்சி மையத்தின் உறுப்பினர் ஜெயந்தி மற்றும் பிற உறுப்பினர்களுடன் பிற்பகல் 12.30 மணிக்கு கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினோதன், மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ், பஞ்சம்பட்டி ஊராட்சி தலைவர் பாப்பாத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி பிரதமர் மோடி, முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசினார். அவரது இந்தி மொழியை மொழிபெயர்த்து யாரும் சொல்லாததால் மோடி என்ன பேசினார் என்று மகளிர் திட்ட குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு தெரியாமல் விழித்தனர். ஏற்கனவே பெயர் பலகைகள், மத்திய வேலை அறிவிப்புகள், ஊர் பெயர்கள் என இந்தியை திணித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் மேலும் சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.