ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்போவதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பாக கொண்டாடப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் கொரானா பெருந்தொற்று காரணமாக எதிர் வரும் ஆண்டுகளில் அரசு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலக புகழ்பெற்ற மன்னர்களில் மிக முக்கியமானவர் ராஜராஜன். அவரது மகன் ராஜேந்திரன். சோழப்பரம்பரையில் இந்த இரண்டு மன்னர்களும் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் படை நடத்தி ஆட்சி செய்த மன்னர்களாவார். ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் தஞ்சையில் உள்ளது. அதே போல் ஒரு கோவிலை அரியலூர் அருகில் உள்ள கங்கை கொண்ட சோழ புரத்தில் ராஜேந்திரன் கட்டியுள்ளார். சோழீஸ்வரம் எனும் ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோவிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
2015ம் ஆண்டு இந்திய அரசு ராஜேந்திர சோழனுக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. கங்கை வரை படைநடத்தி வடஇந்திய அரசர்களை வென்றான். அதனால் அவருக்கு கங்கை கொண்டான் என்ற பெயரும் உண்டு. அதன் நினைவாக கங்கை கொண்ட சோழ புரம் உருவாக்கப்பட்டாக கூறப்படுகிறது. தமிழ் சமூகத்தின் வீரமிக் மன்னர்களாக ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திரனும் போற்றப்படுகிறார்கள். எனவே ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அரசு அறிவிப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.