பிரதமர் நாற்காலியை தூசி தட்டி வைக்குமா, ‘நீசபங்க ராஜயோகம்’?

பிரதமர் நாற்காலியை தூசி தட்டி வைக்குமா, ‘நீசபங்க ராஜயோகம்’?

- ஜாதகமும் கையுமாக அலையும் காங்கிரஸ் !

நட்சத்திரங்களும், கோள்களும் அன்றாடங்காய்ச்சிகளை ஆட்டிப் படைக்கிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளின் தலைகளை தினந்தோறும் உருட்டி வருகிறது. ‘ராஜயோகம் இல்லாட்டியும் பரவாயில்லே, ராஜாவுக்கு பிஏ.வாகுற யோகமாவது இருக்கா..?’ என தங்கள் ஜாதக புத்தகத்திற்கு பூ போட்டு ஜோசியர்களையும், கேரள பனிக்கர்களையும் தேடி அலையும் அரசியல்வாதிகளே இங்கு அதிகம். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா கூட, ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யும் முன் அவரது ஜாதகத்தைப் பார்த்தே தேர்வு செய்ததாகவும் கூறப்படுவதுண்டு.

சாதாரன நேரத்திலேயே இவர்கள் இப்படியென்றால், தற்போது பாராளுமன்ற தேர்தல் பணிகள் நாடெங்கும் அனல் பறந்து வரும் நிலையில் சும்மா இருப்பார்களா என்ன? ‘அடுத்த பிரதமர் யார்?’ என்ற கேள்வியோடு ஜாதக பலனை ஆராயத் துவங்கி விட்டனர் அரசியல்வாதிகள். இதில், பிரதமர் மோடியின் தெளிவான பிறந்த நாள் குறிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதகமே பிரதானமாகப் பேசப்படுகிறது.

அதாவது, கடந்த 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி ‘வசி யோகம்’ என்ற அமைப்பில் பிறந்த ராகுல் காந்திக்கு தற்போது ‘நீசபங்க ராஜ யோகம்’ அமைந்துள்ளதாகவும், இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், மத்திம வயதிற்கு மேல் மிகவும் நாடாளும் பதவியேற்று புகழின் உச்சத்தை எட்டுவார்கள் எனவும் கணித்துள்ளனராம்.

தற்போது, ஏழரை சனி நடக்கும் அவருக்கு இந்த ஏப்ரல் முதல் ராகுவின் பலம் கூடுவதால், கடந்த முறை அள்ளியதை விட இந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிகமான சீட்டுக்களை அள்ளுவார் எனவும் கூறும் அவர்கள், “அவ்வப்போது குறும்பு செய்யும் ஜென்ம சனியின் தாக்கமும் இருப்பதால், கூட்டணி அமைத்து பிரதமராகும் யோகம் இந்த ஜாதகருக்கு உண்டு” எனக் கூறி வருவதால், கடுமையான உற்சாகத்தில் இருக்கிறார்களாம் காங்கிரஸ் தலைவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, ‘நெப்டியூன், புளூட்டோ, பிளானட் ‘எக்ஸ்’ என ‘இங்கிலீசு ஜோசியம்’ பார்க்கும் சிலரோ, “மம்தா பானர்ஜிக்கும், மாயாவதிக்கும் கூட கூட்டணி அமைத்தால் பி.எம் சீட் ‘வொர்க் அவுட்’ ஆகும்” என உசுப்பி வருகிறார்களாம்.

இதைத்தான், சில தினங்களுக்கு முன்பு அ.ம.மு.க.வின் துனைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் சூசகமாகச் சொன்னாரோ..?

தொடர்புடைய செய்திகள்