ஐ வில் டெல் மிஸ்டர் அமீத்ஷா

“ஐ வில் டெல் மிஸ்டர் அமீத்ஷா..” “சொன்னா சொல்லிக்கோ...!”

- எச்.ராஜாவைத் தெறிக்க விடும் ‘சிட்டிங்’ அ.தி.மு.க. எம்.பி

பா.ஜ.க. போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளில், ‘பிளட் பிரஸ்ஸரை’ ஏகத்துக்கும் எகிற விடும் தொகுதியாக கருதப்படுவது சிவகங்கைதான். ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை தோற்கடிப்பதோடு, அக்கட்சியின் முக்கியக் கோட்டையையே கைப்பற்றினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கும்’ என்பதால், கடந்த 1999 ஆண்டு வெறும் 4 சதவீத ஓட்டுக்களில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியைத் தழுவிய எச்.ராஜா, ‘இம்முறை எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும்’ என்ற முனைப்பில் களமாடி வருகிறார். அதனால்தான், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அமீத்ஷாவும் சிவகங்கை தொகுதியின் மீது கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இவர் முழுமையாக நம்பியிருப்பது அ.தி.மு.க.வைத்தான்.

அதே நேரத்தில் இங்கு ‘சிட்டிங்’ எம்.பி.யாக இருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதனும் தொகுதி மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம் அளவிற்கு கெட்ட பெயர் எதையும் சம்பாதித்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த முறை அ.தி.மு.க. தலைமை இத்தொகுதியை பி.ஜே.பி.க்கு விட்டுக் கொடுக்காமல், செந்தில்நாதனையே மீண்டும் நிறுத்தியிருந்தால் வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. அதனால்தான், கூட்டணிக் கட்சிக்கான தொகுதிப் பங்களிப்பின் போது சிவகங்கைத் தொகுதியை விட்டுக் கொடுக்காமல் போராடி வந்தது அ.தி.மு.க. இருந்த போதும், மேலிட வற்புறுத்தலால் இத்தொகுதியானது பி.ஜே.பி.க்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது, ‘சிட்டிங்’ எம்.பி.யான செந்தில்நாதன் முதல், அ.தி.மு.க.வின் தொண்டர்கள் வரை கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன், பிரதிபளிப்பு இன்னும் குறையவில்லை என்று கூறுகிறார்கள் விபரம் அறிந்த சிலர்.

அதாவது, சிவகங்கைத் தொகுதி எப்படியும் தனக்கு மீண்டும் ஒதுக்கப்படும் என நம்பியிருந்த செந்தில்நாதன், அதற்காக கடந்த 2 ஆண்டுகளாகவே தொகுதியின் மீது அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு கூட அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு ‘தாலிக்கு தங்கம்’ வழங்கி, பொதுமக்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் கவர் செய்து வைத்திருந்ததாகவும், திடுதிப்பென தனது தொகுதி பி.ஜே.பி.க்கு ஒதுக்கப்பட்டதால் கடும் மனவருத்தத்தில் இருக்கும் அவர், எச்.ராஜாவின் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை என்றும் குமுறல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

கடந்த வாரம் புதுக்கோட்டைக்கு அமீத்ஷா வந்த போது சிறிது நேரம் எட்டிப் பார்த்த அவர், மானாமதுரை இடைத்தேர்தலை காரனம் காட்டி அங்கேயே தங்கியிருப்பதாகவும், இதனால், அ.தி.மு.க. தொண்டர்களும் எச்.ராஜாவிற்கு வேலை செய்வதில் சுனக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தனக்கு நெருக்கமான சிலரிடம் பேசிய செந்தில்நாதன், “மக்களவையைப் பொறுத்த வரை நம்பாளுங்க எல்லாத்தையும் அ.ம.மு.க.வுக்கு போடச் சொல்லுங்கப்பா” எனக் கூறியதாகவும் தகவல்கள் கசியத் துவங்கின.

இதனால் வெறுத்துப் போன எச்.ராஜா, அமைச்சர் பாஸ்கரனை லைனில் பிடித்து, செந்தில்நாதன் பற்றி நொந்து கொண்டதுடன், அவரைப் பற்றி அமீத்ஷாவிடம் கூறவிருப்பதாக, தனது பாணியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘சவுண்ட்’ விட, அந்த நேரம், மானாமதுரையில் அமைச்சர் பாஸ்கரன் அருகில் இருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த செந்தில்நாதனோ, எச்.ராஜா காதில் விழும்படி, “சொன்னா சொல்லிக்கோ..” என சத்தமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 100 பேருடன் டி.டி.வி.தினகரனை சந்தித்த செந்தில்நாதனை, இன்னும் பலர் அ.ம.மு.க.வின் ‘சிலீப்பர் செல்’ என முத்திரை குத்தி வரும் நிலையில், நடந்த சம்பவமோ அதை உறுதிப்படுத்துவதாக நொந்து போயுள்ளர் பி.ஜே.பி.யினர்.

தொடர்புடைய செய்திகள்