வேளாண்மை

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசுநிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.


எகிப்து, மத்தியப் பகுதி மற்றும் இந்தியா ஆகியவை முற்காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்தல் மற்றும் சாகுபடி செய்தலுக்கு பெயர்பெற்ற பகுதிகளாகும். இக்காலத்தில் சுயேச்சையான விவசாயம் என்பது வடக்கு மற்றும் தென் சீனா, ஆப்பிரிக்காவின் சஹெல், நியூ கினி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் உருவானது. இப்பழங்கால விவசாயத்தில் எம்மர் கோதுமை, என்கான் கோதுமை, தோல்நீக்கிய பார்லி, பட்டாணி, அவரையினங்கள், துவரை மற்றும் சணல் முதலான எட்டு நியோலிதிக் அடிப்படை பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.
மலைகள், பீடபூமிகள் ஆகியவை முக்கியமான நிலத்தோற்றங்கள் ஆகும். அவற்றுள் சமமான நிலப்பரப்புடன் கூடிய வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்றதாகும். உலகின் சமவெளிப்பகுதிகள் மிக அதிக அளவில் பயிர் விளைவிக்கும் நிலங்களாகத் திகழ்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியாவின் வடஇந்தியச் சமவெளி. இச்சமவெளி வேளாண் தொழில் செய்ய உகந்த நிலப்பரப்பாகும். மலைப்பகுதிகளில் சமப்பரப்புப் பகுதிகள் மிகக் குறைவாக இருப்பதால் வேளாண்தொழில் அங்கு குறைவாகக் காணப்படுகிறது. ஆனால் மலைச் சரிவுகள் காப்பி மற்றும் தேயிலை பயிர்கள் வளர உகந்த இடமாக உள்ளது. இப்பயிர் வளர நீர்வழிந்தோடும், நீர்த்தங்காத மலைச் சரிவு தேவையாக உள்ளது. தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வேளாண்தொழிலில் ஈடுபட்டிருந்ததால் இலக்கியத்திலும் வழக்கிலும் நிலங்களின் தன்மை பற்றிய அறிவு உள்ளது. பொதுவாக நிலங்களின் நீர்ப்பிடிப்பைப் பொருத்து நன்செய் நிலம், புன்செய் நிலம் என வகைப்படுத்துவர்.தொடர்புடைய செய்திகள்