பரபரக்கும் தமிழகம்.. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்ட போலீஸார்

சென்னை: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி சுமார் 15,000 துணை ராணுவத்தினர் உட்பட 1 லட்சத்திற்கும் அதிகமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு துவங்க உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். இதனையடுத்து தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகம் மொத்தத்தில் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிய வந்துள்ளது இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சித்திரை திருவிழா நடைபெற்று வரும் மதுரை மாவட்டத்தில் 2719 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் வெளியூர் காவல்துறையினர் என 6500க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற உள்ளனர். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்