பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக செல்கிறார்களா? நீதிமன்றம் கேள்வி

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யவதற்காக, பள்ளிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதன் நிலை என்ன என்பது குறித்து ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க தொடக்க கல்வி இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்.

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி என்பவரின் எல்.கே.ஜி. படிக்கும் மகள், பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கடந்த 2017ல் நடந்த இந்த சம்பவத்துக்கு பள்ளி வாகனத்தில் நடத்துனர் இல்லாததே காரணம் எனக் கூறி, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அஞ்சலிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அந்த மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்... தமிழக மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து பள்ளி வாகனங்களிலும் நடத்துனர் இருக்க வேண்டும்... ஆனால் இதை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வில்லை எனக் கூறியுள்ளார்.


இந்த மனு, நீதிபதி புஷ்பா சத்தியாநாரயணா முன் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், பல பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யவதற்காக, பள்ளிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதன் நிலை என்ன என்பது குறித்து ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க தொடக்க கல்வி இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்